RSS

Wednesday, February 20, 2008

முரணித்த மனிதம் - கடவுள்??

முரணித்த மனிதம் – கடவுள்???

வாழ்க்கை பாதையின் முக்கிய அத்யாயம் தேடி தமிழ் நாட்டின் தலைப்பகுதிக்கு பயணப்பட்டது என் கால்கள். நம்பிக்கையும் வண்ணம் மின்னும் கனவுகளும் நிறைந்திருக்க என் கண்கள் வழி தேடி சென்றது.

ஒட்டடைகளின் வீடு , ஒரு அடுக்கடுக்கு குடியிருப்புகளின் இரண்டாம் தளத்தில் அமைந்திருந்தது.ஒட்டடைகளோடு சில மனிதர்களும் இருக்க, நானும் புதியவளாய் பேயிங் கெஸ்டாகச் சேர்ந்தேன்.

மூச்சு முட்டும் தூசுகள் நடுவில் சிற்றெறும்பின் கடியும் சேர்ந்து என்னை அன்புடன் வரவேற்றது. ஒவ்வொருவரும் ஒரு துருவத்தில் இருக்க, என் துருவம் எதுவென அனுமானிக்க இயலாத படி.. திசையிலியாக நான் பரிணமித்தேன்.ஒருவரோடு ஒருவர் முகம் திருப்பும் முகங்கள் அனைத்தும் என் முகம் பார்த்து பூத்துச் சிரித்தன. என் அன்பின் பூச்சால் அவ்வீட்டின் அமைதி நிரப்பினேன்.


ஒத்துவராத சமையல் ஆட்களால் வார்டன் அம்மா தினமும் பெல் அடித்து பாடும் சுப்ரபாதம்.. “இன்று உணவு இல்லை. வெளியில் சாப்பிடுங்க”.

அனுதினமும் மேக்கி பாக்கெட்டும், முட்டை பொரியலும் சமைத்து சமைத்து அலுத்துப் போனது. வெளியுணவு உண்டு வயிறுக்குள் போர் ஆரம்பித்திருந்தது.

வயிற்றில் நடந்த மகாப் போரில்.. வெற்றி பெற்றது வயிறே..! என்னை தோற்கடித்து படுக்கையில் சாய்த்தது. யாருமற்ற அறையில் ஒட்டடைக்கு வலிக்காமல் சுற்றிக் கொண்டிருக்கும் மேல் சுவரின் மின்விசிறி பார்த்தே விழி நிறைந்தது.

உடல் சோர்ந்து கிடைக்கையில் எங்ஙனம் எழுவது.. எங்ஙனம் சாலை கடந்து உணவு வாங்குவது??


மாலை வந்தது.. பூ நட்பு மருத்துவம் பார்த்து அழைத்து வந்தாள். கஞ்சி தவிர வேறு சுவைக்க கூடாதென மருத்துவர் சொன்னது நினைவில் வந்து வாட்டியது.
உணவுக்கே இங்கே பஞ்சமிருக்க.. கஞ்சிக்கு ஏது வழி??

விழி நீர் துடிக்க, ஆறுதலோடு நட்புக்கரங்கள் வார்டன் அம்மாவிடம் அழைத்து சென்றது.
பூவுடல் குறித்து பூவோடு சென்று விளக்கமளித்து கஞ்சிக்கு ஏற்பாடு செய்வதாய் நம்பிக்கை மூட்டியது.

அறைக்கதவு திறக்க.. தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்தது கடவுளின் துதிகள் கொண்ட அலைவரிசை. அவர்கள் அலைவரிசையில் மூழ்கியிருக்க.. வருந்தி அழைத்து தோழி இதழால் வார்த்தை உதிர்த்தாள்.

பூவைத் தாங்கியபடி, பூ நட்பு.. பூவுடல் தளர்ந்ததால், இரவும் காலையும் கஞ்சி தேவை. வேலையாட்களிடம் சொல்லி ஏற்பாடு செய்ய முயலுங்களென எனக்காக அங்கே கெஞ்சிக் கிடந்தது எனது நட்பு.

அலுத்துக் கொண்டு தலை திருப்பி நின்றனர். வேலை ஆட்கள் செய்வாரென தெரியாது என வெடுக்கன சொல்லி அன்பின் உருவத்திற்கு துதி பாட தலை திருப்பிக் கொண்டனர். அன்னையும் பொண்ணும் அலுக்காமல் சொல்லி சட்டென கிரில் கதவடைத்து உள் சென்றுவிட்டனர்.
பூவிதழ் வாட.. மனம் முழுக்க வெறுமை நிலைக்க தளர்ந்த படியே நட்போடு வந்தேன். ஏனோ கண்கள் மட்டும் மடை திறந்து அழுதது.

கடவுள் துதியை எப்போதும் பாடும் அவர் உள்ளத்தில் அன்பில்லாத நிலை கண்டு முதல் முறை வியந்து அதிர்ந்தேன்.

ஜீரணிக்க முடியாத துயர் இது என மன வேதனை கொண்டு அழுது புலம்பினேன். மனிதம் இல்லாத மனிதர், கடவுள் மட்டும் துதித்தென்ன லாபமென கோபம் முட்டி அழுகையாய் வந்தது.

முரணான இது போன்ற நிமிடங்கள் ஏராளம் ஏராளம்.

மனிதம் வேறு கடவுள் வேறல்ல..!

அடுத்தவர் துன்புற.. காத்து ரட்சிப்பது தான் கடவுள் குணம்.

என்று இதை புரிந்து கொள்வார்கள்????
__________________
~பூள்.

0 comments: