எதிர்நீச்சல்
என் கல்லூரி கால நினைவலைகளில் மிக முக்கியமாக எந்த ஒரு சந்தோசமான திருப்பமும் இல்லாவிடினும் முக்கியமாக ஒரு அதிர்ச்சி மிக்க சம்பவத்தை என்னால் என்றுமே மறக்க இயலாது.
நான் படித்த கல்லூரியில் என் பேட்சில் எனது நெருங்கிய உறவினரின் மகனும் வேறு பாடப் பிரிவில் படித்து வந்தார். அவர் படித்தது சற்று கடினமான படிப்பாக கருதப்படும் எலக்ரிக்கல் அண்ட் எலக்ரானிக்ஸ் துறை.
நான்கு ஆண்டுகள் படிப்பில் மூன்றாம் ஆண்டை அடியெடுத்து வைத்திருக்கிறோம்.
அண்ணா பல்கலைக் கழகத்தின் மாற்றத்தால் எல்லா கல்லூரிகளும் முதல் முறையாக அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் வந்தன. இதனால், முதல் அடி எங்கள் தலையில் தான் விழுந்தது.
கடினமான பாடத் திட்டம், முதல் ஆண்டு வேறு பல்கலைக் கழகத்தில் படித்துவிட்டு, இரண்டாம் ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத்திற்கு மாற்றியதால் குழப்பமான பாடங்கள். தேர்வுகள் மிக மிக கடினமாக அமைந்தன.
ஒவ்வொரு செமஸ்டரிலும் ஏதேனும் ஒரு தேர்வு, மிகவும் பயப்படும் படி அமைந்துவிடும். இப்படியான கால கட்டத்தில் ஆங்கில வழிக் கல்வி பயிலாத என் போன்ற பல தமிழ் வழி மாணவர்கள் திணறிப் போயினர். நான் எப்படியோ சமாளித்து விட, பெரும்பாலான கிராமப்புற மாணவர்கள் பெரும் அவதியுற்றனர்.
என் உறவினரும் என் போலவே தமிழ் வழி கல்வி பயின்றவர். ஒரு தனி வீடு எடுத்து தனது சக தோழர்களுடன் தங்கி படித்துவந்தார். என் தந்தையின் மிக நெருங்கிய நண்பரும் மிகப் பெரும் ஆங்கில பேராசியரும், லண்டன் கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தில் வெகு நாட்கள் பணியில் இருந்தவருமான ஒரு மிகப் பெரும் ஆசான் எங்களுக்கு உதவ வேண்டி, நட்பு பொருட்டு மட்டுமே தனது பெரும் இக்கட்டான உடல் நிலையையும் பொருட்படுத்தாது பலப்பல இடர்களுக்கு இடையிலும் வாரம் ஒரு முறை எங்கள் எல்லாருக்கும் வகுப்பு எடுக்க, என் உறவினர் வீட்டுக்கே வந்து அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கிலப் புலமைக்கு வழி வகுத்தார்.
அங்கே எங்களோடு பயின்ற என் உறவினர் வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவன் அதில் சேர்ந்து பெரும் திணறலுக்கிடையிலும் விடா முயற்சியாய் பயின்று வந்தார். இத்தகைய நல்வழிக்கு நாங்கள் வித்திட்டதாலோ என்னவோ.. என்னையோ.. என் அம்மாவையோ எங்கு கண்டாலும் அன்புடன் விசாரிப்பார்.
மூன்றாம் ஆண்டு இரண்டாவது செமஸ்டர் முடிந்து ரிசல்ட் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே 13 தேர்வுகளில் அரியர் வைத்த நிலையில் அந்த தேர்வில் மறுபடி 5 தேர்வுகளில் அரியர் விழுந்திருக்கிறது.
இரவு ரிசல்ட் பார்த்துவிட்டு, காலையில் எப்பவும் போல் எல்லா மாணவர்களும் கல்லூரிக்கு வந்தாலும், இந்த மாணவர் மட்டும் வழக்கமாக ரிசல்ட்டுக்கு அடுத்த நாள் கல்லூரிக்கு வராமல் வீட்டிலேயே உறங்கிக்கொண்டு இருப்பார். அதே போல், என் உறவினர் “ஏண்டா.. இன்னிக்கி காலேஜ் வரலையா?” என்று காலையில் கேட்க, “இன்று வரலை.” என்று சொல்ல, சரி எப்பவும் போல் இன்று விடுப்பு எடுத்து நாளை வருவான் என்ற நம்பிக்கையில் சென்றுவிட்டார்.
மதிய உணவு இடைவேளையில் ஏதோ புத்தகம் எடுக்க தனது வீட்டுக்கு வந்த என் உறவினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் தங்கியிருந்த வீடு பெரிய ஹால், இரு படுக்கை அறைகள் என சகல வசதியும் கொண்ட நேர்த்தியான வீடு. அதில் முன் புற கதவு தாழிடாமல் இருக்க, எப்பவும் போல் என் உறவினர் உள்ளே செல்ல… ஹாலில் அந்த மாணவனைக் காணாமல் படுக்கை அறைக்கு செல்ல… அங்கே அவர் கண்ட காட்சி…
மின்விசிறி மாட்டுவதற்காக வைத்திருந்த கம்பியில் துணி கொண்டு தூக்கில் தொங்கும் நிலையில் அவர் வகுப்பு தோழன்.
ஸ்டூலோ… ஒரு சேர் கூட இல்லாத நிலையில், ஜன்னல் கம்பிகள் கொண்டு ஏறி.. எட்டிப் பிடித்து தூக்கில் தொங்கியிருக்கிறான்.
மொத்தம் 18 பேப்பரில் அரியர் இருப்பதால் எதிர்காலம் குறித்த அச்சமும் பயமும் தன் மீது தனது கிராம மக்களே வைத்திருக்கும் பாசமும் நம்பிக்கையும் எண்ணி எண்ணி இப்படி ஒரு மகா கொடுமையை அந்த மாணவன் செய்திருக்கிறான்.
இது நடக்க இரு நாட்களுக்கு முன்பு தான் வழியில் என்னையும் என் அன்னையையும் பார்த்து அன்புடன் விசாரித்த அவர், சமீப காலமாக உடல் வலிமை பெற உடற்பயிற்சி நிலையத்துக்கு கூட சென்று கட்டு மஸ்தான உடல் வாகுவை ஏற்படுத்தி எங்களை எல்லாம் பெரும் ஆச்சர்யத்தை உண்டாக்கியிருந்தார்.
உடல் வலிமை அடைந்த அளவு உள்ளத்து வலிமை இல்லாது போனது ஏன்?? 18 அரியர் என்ன.. என் வகுப்பில் அதே போல் 25 அரியர் வைத்தவர் கூட இன்று எல்லா தேர்வையும் எழுதி பட்டம் பெற்று அவர்களுக்கு பிடித்த வேலையில் மகிழ்வுடன் எதிர்நீச்சல் போட்டு வெற்றியுடன் இருக்கிறார்கள்.
ஏன் இப்படியான கோழைத் தனமான முடிவுகளுக்கு நம் இளைஞர்கள் ஆளாகிறார்கள்??
உடல் வலிமைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஏன் உள்ளத்து வலிமைக்கு யாருமே கொடுப்பதில்லை??
இந்த செய்தி கேட்டு, பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி, கல்லூரியே அழுதது. ஒரு நாள் விடுப்பும் விட்டது. எல்லாரிடமும் அன்பாகவும் பண்பாகவும் பேசும் அந்த நல்ல மாணவன் இழப்பு அவன் குடும்பத்திற்கு மட்டுமல்ல.. அவர்கள் ஊருக்கே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த கிராமத்திலிருந்து பொறியியல் படிக்க வந்த முதல் மாணவர் இவர் தானாம்.
படிப்பு வராவிட்டால் என்ன, வேறு எத்தனையோ வழி இருக்கு சாதிக்க.. திரும்ப வீட்டுக்கு சென்றிருந்தால் கூட அவர்கள் சொந்த தொழில் ஏதும் செய்து முன்னேறியிருக்கலாமே… இப்படி பலப்பல அவர்கள் கிராம மக்களால் கண்ணீருடன் கூறப்பட்டது.
இந்த மாணவரின் இழப்பு, அவரின் தாயாரை மனநிலை சரியில்லாமல் போகும் அளவு பாதித்திருக்கிறது.
இளைஞர்களே… உங்களுக்கு ஏதேனும் ஒன்றில் தோல்வி வந்தால் உடனே தற்கொலை தான் தீர்வு என எண்ணுவதை விடுங்கள்.
நமது இறப்பில் கூட ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். இயற்கையாய் நிகழும் மரணத்தை தவிர, நாமே தேடிக் கொள்வது மிக மிக முட்டாள்தனமான செயல்.
பிறந்ததற்கான ஒரு அர்த்தத்தை இவ்வுலகில் ஏற்படுத்திச் செல்ல வேண்டும். உருகி ஓடும் மெழுகு கூட, தன்னை அழித்து உலகுக்கு வெளிச்சம் பரப்பிச் செல்கையில், நாம் எத்தகையதொரு மாற்றத்தை உலகுக்கு அளித்துச் செல்ல வேண்டும்??
பலரது கண்ணீரைத் துடைக்கா விட்டாலும் பரவாயில்லை. பலரின் கண்ணீருக்கு காரணமாக இல்லாமல் இருக்கலாம் அல்லவா??
எதிர்நீச்சல் போட துணிவில்லையெனில் மனிதனாய் பிறந்து பயனென்ன?
வாழ்க்கை வாழ்வதற்கே..!
__________________
~பூமகள்.
~பூமகள்.
0 comments:
Post a Comment