RSS

Wednesday, February 11, 2009

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பார்வையில் எழுத்தாக்கங்கள்..!

சென்ற வருடத்தில் ஓர் இரவு எதேட்சையாக எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு கல்லூரியில் பங்கேற்ற ஒரு கலந்துரையாடல் பட்டறையின் ஒலியாக்கம் எங்கள் ஊர் வானொலியில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது..

இடையிலிருந்து கேட்டதால்.. பேசுவது யார் என்ற தெரியாமலேயே இவரின் பேச்சு என்னை ஈர்க்கத் தவறவில்லை...

கல்லூரி மாணவர்கள் வரிசையாக கேள்வி கேட்க.. ஒவ்வொன்றுக்கும் ஆழ்ந்து.. பல விசயங்களைச் சொல்லும் முனைப்போடு வெளிப்படையாக பேசினார்...

நிறைய கவிஞர்களைப் பற்றி.. அவர்தம் கதைகளைப் பற்றி... சிறுகதையில் எவையெல்லாம் பதிவாக்கப்பட்டிருக்கின்றன.. எவை விடுபட்டுவிட்டன.. என்பது பற்றிய ஆழ்ந்த ஆராய்ச்சி அவரில் இருந்ததை அவரது பேச்சிலிருந்து உணர முடிந்தது..

அவர் பேசுகையில்.. எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதைகளில் பெரும்பான்மையானவை.. நடுத்தர வர்க்கத்தின் பயத்தை அப்பட்டமாக பதிவாக்கியிருந்ததாகச் சொல்கிறார்.. உதாரணங்களாக... ஒரு நுழைவுச் சீட்டு வாங்க நீண்ட வரிசையில் நிற்கும் நடுத்தர வர்க்கத்து நபர்.. நாம் செல்வதற்குள் சீட்டு முடிந்துவிடக் கூடாது.. சீட்டு கொடுக்கும் நேரம் முடிந்து விடக் கூடாது என்று பதைபதைப்பாரோ.. அவ்வாறான சின்ன சின்ன படபடப்புகளையும் அழகாக கதையில் கொண்டு வந்து எதார்த்தத்தை விவரித்திருப்பாரென உரைத்தார்..

மற்றுமொரு கதையில்.. ஒருவர்.. மருத்துவமனைக்குச் செல்கிறார்..அங்கே... பெரிய வரிசை.. மருத்துவருக்காக காத்திருக்கிறது... இவரது எண்ணமெல்லாம் எப்படி செவிலிப் பெண்ணிடம் தனது டோக்கனுக்கு பதிலாக முந்தைய டோக்கன் வாங்கி உள்ளே பார்க்கச் செல்வது.. என்பதிலேயே இருக்கிறது.. நோயைப் பற்றிய நினைப்பு போய்.. அங்கே.. இந்த மாதிரியான நடுத்தர வர்க்கத்து ஏக்கம் மிகுந்த படபடப்பை பதிவாக்கியிருப்பதாக உரைத்தார்..

மேலும்..
எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய.. "விரல்" கதை..எப்படி வித்தியாசமான கதைக்களத்தோடு இருந்தது என்பதை உணர்த்தினார்..
"விரல்" கதையின் சுருக்கத்தையும் சொன்னார்..

ஒரு எழுத்தாளர்.. குடித்துவிட்டு.. அவரது நண்பர் வீட்டுக்கு.. பணம் தேவைப்பட.. வாங்குவதற்காகச் செல்கிறார்..

அவர் சென்ற நேரத்தில்.. நண்பர் இல்லை.. கதவைத் திறந்து.. நண்பரின் மனைவி.. இவரின் நிலை கண்டு தனித்து இருக்கும் தன்னிடம் ஏதும் தகறாரு செய்ய கூடும் என அஞ்சுகிறார்..

நண்பரின் மனைவி.. "அவர் இல்லை போயிட்டு வாங்க" என்று சொல்லி பட்டென்று கதவடைக்கிறார்..

மீண்டும் கதவு தட்டி "உங்களிடம் இருக்கும் தொகையாவது தாங்கள்..அவசரமாக பணம் வேண்டும்" என்று இவர் வினவி உள்ளே செல்ல முயல்கிறார்..

இவர் உள்ளே வர முற்பட.. "அவர் இல்லை.. போயிட்டு வாங்க" என்று சொல்கிறார்...

இவரது மறுமொழியைக் கூட வாங்காமல் பட்டென்று கதவு சாத்தப்படுகிறது.. இவரது சுண்டுவிரல்.. கதவிடுக்கில் சிக்கி பயங்கரமாக வலிக்கிறது..

இவர் வலியில் "கதவைத் திறங்கள்" எனக் கத்த.. அந்த நண்பரின் மனைவியோ... இவர் கதவு திறக்கத் தான் கூப்பாடு போடுகிறாரென நினைத்து.. திறக்காமலே பதில் சொல்கிறார்..

இறுதியாக.. இவரது வலியினை உணர்ந்து கதவு திறந்து விடுகிறார்.அப்போது..சுண்டுவிரல்.. நைந்து போய் ரத்தம் வழிகிறது..
அப்போதும்..அந்த பெண்மணி, "வீட்டில் அவர் இல்லை.. வெளியில் எங்காவது சென்று மருத்துவனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறி கதவடைக்கிறார்.

இவர் வலியோடே.. மற்றொரு நண்பரைப் பார்க்கிறார்.. பையில் பணமிருக்கிறதா என வினவ.. இருக்கு என்று அவர் சொல்ல..

இவர் நண்பர்.. அவரின் நிலை கண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.. அங்கே.. செவிலிப் பெண்.. கை விரல்.. எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.. இத்தனை நைந்த நிலையில் மருத்துவர் தான் வந்து சிகிச்சை அளிக்க முடியும்.. ஆகவே காத்திருங்கள் என சொல்கிறார்..

உடன் வந்த நண்பர்..வேறு மருத்துவனை போய் கைக்கு சிகிச்சை பார்ப்போமென அழைக்க..
காத்திருந்த அடிபட்ட நண்பர்.. "பையில் பணமிருக்கில்ல.. பக்கத்துல பிரியாணிக் கடையில் நல்லா பிரியாணி போடுவாங்க.. வா சாப்பிடலாம்" என அழைக்கிறார்..

அவரது நண்பர்.. முதலில் அதிர்ச்சியாகி..பின்பு.. இருவரும் ஒன்றாக பிரியாணிக் கடை நோக்கி பயணப்படுகிறார்களென கதை முடிந்திருக்கும்..

இதில்.. கை விரலே.. அடிபட்டு.. ரத்தம் சொட்டச் சொட்ட எலும்பு உடைந்த நிலையில் ஒருவர்.. அதைப் பற்றி கவலைப்படாமல்.. சாப்பிட போகலாமென அழைப்பது முற்றிலும் வித்தியாசமான கதை..

இது நிஜ சம்பவமாகத் தான் இருக்குமென எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் விவரித்தார்..

மற்றுமொரு நிஜச் சம்பவத்தை அசோகமித்திரம் எப்படி பதிவாக்கியிருந்தார் என்பதையும் உரைத்தார்..

அடுத்து இப்படியாக அமைந்த அசோகமித்திரனின் வேறு ஒரு கதைநாயகர்கள் பற்றியும் கூறினார்..

ஒரு நண்பருக்கு ஒருவர் புதிதாக வேட்டி வாங்கித் தருகிறார்.. அவரும் அதை அணிந்து பார்க்கிறார்..அந்த நண்பரை இருக்கச் சொல்லிவிட்டு.. புதுவேட்டியோடு வெளியில் கிளம்புகிறார்..

சற்று நேரம் கழித்து அழுக்கான பழைய வேட்டியோடு அந்த நண்பர்
திரும்பி வருகிறார்..

பார்த்த இந்த பரிசளித்த நண்பர்.. அதிர்ந்து.. எங்கே அந்த புதுவேட்டியென்று கேட்க.. "எனக்கெதுக்கு புதிது.. நல்லவிலைக்கு ஒருவருக்கு விற்றுவிட்டேன்.. அவர் கட்டியிருந்த வேட்டியை வாங்கிட்டு வந்துட்டேன்" என்று இயல்பாக பதிலளிக்கிறார்..

இங்கே... இப்படியுமா இருப்பார்கள் என்றால்.. உண்மைச் சம்பவம் இது என்று ராமகிருஷ்ணன் அவர்கள் சொல்வதை ஏற்காமலும் இருக்க முடியவில்லை..

தனது படைப்பைப் படித்து பார்க்கத் துடிக்கும் ஒவ்வொரு வாசகரையும் ராமகிருஷ்ணன் அவர்கள் நேரில் சென்று பார்ப்பதாகவும்..அது தான் தகுந்த செயலென்று கூறினார்..

படைப்புகள் காலத்திற்கு ஏற்ப நிற்கும்.. உதாரணமாக.. மகாக்கவியின் பாடல்களான.. "ஆசை முகம் மறந்து போச்சே" மற்றும்.. "காற்று வெளியிடைக் கண்ணம்மா" பாடல்கள் எல்லாம் அவர் காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதில்லை என்றும்... இப்போது இக்காலத்தில் பரவலாக பிரபலமாகியிருக்கிறது என்றும் கூறினார்..

சுதந்திரப் போராட்ட காலத்தில் சிறுகதைகளின் பங்கு பற்றிய ஒரு கல்லூரி மாணவரின் கேள்விக்கு விடையளிக்கையில்..

குஜராத் ஜாலியன் வாலாபாக் படுகொலையெல்லாம் எங்ஙனம் நடந்தது என்பதற்கான.. பதிவுகள் ஆவணங்கள் செய்து வைத்திருந்தனர்.. இங்கே... (தமிழ்நாட்டில்)நடந்த பெரிய பெரிய நிகழ்வுகள் எல்லாம் பதிவாக்கப்பட்டாமலேயே போய்விட்டன..

முக்கியமாக.. உப்புச் சத்தியாகிரகம்.. காந்திஜியின் வருகை... விதவைத் திருமணம்.. இவையெல்லாம் தான் பதிவாக்கப்பட்டிருக்கிறது...

சுதந்திர காலத்தில்.. வெள்ளையர் நம்மை ஆள வேண்டும்.. அவர்கள் தான் நம்மை காப்பாற்றுவார்களென ஒரு இயக்கமே தமிழகத்தில் தான் போராடியது என்று கூறி வருந்தினார்..

நிறைய பயணங்கள் செய்வார்... என்று கூறினார்.. நடந்து.. பேருந்தில்.. இப்படி பல..

அவரது ஆஸ்ரேலியப் பயணத்தைப் பற்றியும் குறிப்பிட்டார்... ஒருமுறை.. ஆஸ்ரேலியாவின் பல்கலைக் கழகத்துக்கு... செல்கையில்..அங்கிருக்கும் ஒரு பேராசிரியர்.. அவருக்கு சொல்லிக் கொடுத்த பேராசிரியரை எப்படி வணங்கினார்.. எங்ஙனம் அவரது எல்லா வெற்றிகளிலும் அவரது பெயரை கூடவே.. இன்னாருடைய மாணவர் என்றும் எழுதியிருந்தார்.. என்று உரைத்தார்..

அப்படி சொல்லிய பேராசிரியருக்கே.. அறுபது வயதிருக்குமெனில்..அவரது பேராசிரியருக்கு எத்தனை வயதிருக்கும்.. ஆனால்.. அடிக்கடி அவரைச் சந்தித்து நிகழ்வுகள் பற்றி பரிமாறிக் கொள்ளும் அந்த மதிப்பைப் பார்த்து அசந்து போனதாகச் சொன்னார்..

ஒரு நல்ல கல்லூரி.. ஒரு மாணவரை கல்லூரி முடித்த பின்பும் மீண்டும் மீண்டும் வரச் செய்யும்படி அமைய வேண்டும் என்று சொன்னார்..

இன்னும் பல விடயங்கள் பற்றி என் அறிவிற்கும் அப்பால் உரைத்தார்... எனது மூளையில் தெளிவாக பதிவாகிய மிகச் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..

இன்னும் விசாலமாக இலக்கியம்.. சிறுகதைகள் மற்றும் எழுத்தாளர்கள் சார்ந்த தமிழறிவை வளர்க்கும் முயற்சியில் நான் பயணிக்கிறேன்..!!

நன்றி: ஞானவாணி வானொலி
__________________
-- பூமகள்.

0 comments: