RSS

Monday, February 9, 2009

நான் கடவுள்..! - திரை விமர்சனம்


பிரம்மிப்பூட்டும் ஆர்யாவின் சிரசாசனத்தோடு ஆரம்பித்து அதிரடியான துவக்கத்தோடு ஆரம்பித்திருக்கும் பாலாவுக்கு ஒரு சபாஷ்.

காசியின் கொஞ்சம் கொஞ்சமாக அசுத்தமாகிக் கொண்டிருக்கும் அழகில் எஞ்சியிருப்பதை அழகாக காட்ட முயன்றிருப்பது புரிந்தது.

ஆர்யாவின் அசத்தல் உடல் வாகுவுக்கு 3 வருட அதீத உழைப்பு அவசியமற்றதாகவே தோன்றியது. சில மாதங்களே போதுமானதாக இருந்திருக்கலாம். அத்தனை பாடுபட்டும் படத்தில் மிகக் குறைவாக ஆர்யாவைக் காட்டியிருப்பது வருத்தமளிக்கிறது.

படத்தில் பிச்சையெடுப்பவர்களின் மனங்களையும் வலிகளையும் காட்டியிருப்பது உலகின் இருண்ட பாகத்தைக் காட்டுவதாக அமைந்திருந்தது. நரகத்தில் சில நிமிடங்கள் இருந்தது போன்ற பிரம்மையை சில கொடூர காட்சிகளும் வார்த்தையாடல்களும் காட்டியது.

ஆங்காங்கே தூவியிருக்கும் நகைச்சுவை படமெங்கும் நிரம்பியிருந்தது கச்சிதம்.. பிச்சைக்காரர்களாக வந்து சிரிக்க வைத்தாலும்.. மனம் விட்டு சிரிக்க இயலாதபடி ஏதோ ஒரு பாரம் மனதை அழுத்தியது.. அவர்களுக்காக யோசிக்க வைத்தது..

படத்தில் பெண்களை அடித்து உதைக்கும் காட்சிகள் மிகக் கொடுமையாக இருப்பதால் படம் பார்க்கிறோம் என்பதை மறந்து எழுந்து திரையில் வரும் வில்லனை கொல்ல மனம் துடிக்கிறது. மென்னுள்ளம் படைத்தவர்கள், குறிப்பாக பெண்கள் இப்படத்தைத் தவிர்ப்பது நலம். நிறைய இடத்தில் கத்தரிக்கு வேலை வைத்திருப்பது புரிந்தது. வசனங்களின் பல இடங்களில் 'ஒலி' தடை செய்யப்பட்டுயிருப்பது அதிக கெட்ட வார்த்தை பிரயோகம் இருப்பதை உறுதி செய்தது. வன்முறைக்காட்சிகள் அதி பயங்கரமாக வந்திருக்கிறது.

ஆர்யாவின் கம்பீரமான உடல் வாகுவும்.. மந்திர உச்சரிப்புகளும் ஏதோ ஒரு யோக நிலையை நம்மில் ஏற்படுத்திவிடுகிறது..படத்தின் ஆரம்பத்தில் வரும் பாடலும் இடையில் வரும் "பிச்சைப் பாத்திரம்.." என்ற மது பாலகிருஷ்ணனின் தேனமுத குரலில் வரும் பாடலும் மனத்தில் அமர்ந்து நகர மறுக்கிறது.. கே.ஜே.ஜேசுதாஸின் குரலை நினைவுறுத்தியதை மறுப்பதற்கில்லை.

அதே போல் படமெங்கும் தன்னைக் கடவுளாக சொல்லிக் கொள்ளும் கூட்டம், கஞ்சாவுக்கு அடிமையாக இருப்பது மட்டும் சரியா?? என்ற பகுத்தறிவுக் கேள்வியும் மனதில் எழாமல் இல்லை. ஆர்யா கதாப்பாத்திரமும் அவ்வண்ணமே சதா கஞ்சாவும் கையுமாக இருப்பது மனதை நெருடுகிறது. ஆயினும், அகோரிகளின்( தன்னை கடவுளாகச் சொல்லிக் கொள்ளும் சாமியார்கள்) உண்மையான வாழ்க்கை நிலை இப்படித் தான் இருக்கிறதோ என்னவோ என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்ள வேண்டியதாக இருந்தது.

பூஜாவின் மிக இயல்பான நடிப்பு அசர வைக்கிறது. குறிப்பாக பூஜா முதன் முதலில் ஆர்யாவுடன் பேசும் காட்சி, சற்றே இழுவை போல தோன்றியது. அழுத்தமான வசனங்கள் குறைவாக இருந்தது படத்தில் ஒரு பெரும் குறை. பல காட்சிகள் இழுவையாகவே தோன்றியது.

எல்லாவற்றையும் தாண்டி, படத்தின் பலம்.. ஆர்யாவின் நடிப்பு, கண்களில் தெறிக்கும் வெம்மை, கயவர்களைக் கண்டவுடன் இனம் காணும் அகம், பார்த்த இடத்திலேயே கொன்று தீர்க்கும் செயல் என எல்லாமே நம் மனக் குமுறல்களுக்கு ஆறுதலாக..!!

படத்தின் இறுதிக் காட்சியில் ஒரு நிமிடம், சுற்றியுள்ள அனைவரும் மறந்து மனம் ஒரு நிலைப்பட்டு, யோக நிலையை அடைந்ததை என்னால் மறுக்க முடியாது.

நான் கடவுள்.... மொத்தத்தில், அல்லவை அழிக்க காத்திருக்கும் ஒவ்வொரு தூய மனத்துக்குமான அடையாளம்..!!

-பூமகள்.

0 comments: