ஸ்லம்டாக் மில்லேனியர் (ஆங்கில மொழிப் படம்)
படத்தின் ஆரம்ப காட்சி சிறுவர் பட்டாளத்தின் கொண்டாட்டங்களோடு, மும்பை நகரின் மிக அழுக்கான அடிப்படை வசதிகள் கூட சரிவர இல்லாத இடத்தில் வாழும் குழந்தைகளின் விளையாட்டுகளைக் காட்டுவதிலிருந்து ஆரம்பிக்கிறது படம்..
காவலர்கள் துரத்த சிறார்கள் ஓடும் காட்சி அமைப்பும், அதற்கு தகுந்தாற்போன்ற பின்னணி இசையும் தூள் கிளப்புகிறது..
அண்ணன் சலீம்,தம்பி ஜமால் என்ற இரு சிறார்களை நோக்கி குவிகிறது கதை..
ஒரு சில ஆரம்பக் காட்சிகளிலேயே மும்பையின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், வறுமை நிலையையும் சட்டென மூஞ்சியில் அறைந்தார் போல அப்பட்டமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளரைப் பாராட்டியே ஆக வேண்டும்..
மழையில் நனையும் சிறுமி லத்திகாவை தாங்கள் ஒதுங்கியிருக்கும் இடத்துக்கு அழைப்பதிலாகட்டும், தாஜ்மகாலின் கதையை பார்வையாளரிடம் சொல்லும் விதத்திலாகட்டும் சிறுவனாக வரும் ஜமால் அசத்தியிருக்கிறான்... மென்மையான மழலை மாறா முகத்தை வைத்துக் கொண்டு அமிதாப் பச்சனிடம் ஆட்டோகிராஃப் வாங்க செய்யும் ஆர்ப்பாட்டம் திரையரங்கையே குலுங்கச் செய்கிறது.. அக்காட்சியில் எத்தனை தடை வந்தாலும் தனது குறிக்கோளை அடைய உழைக்கும் அந்த ஈடுபாடு அழகாக வெளிப்பட்டிருக்கிறது..
சிறுமி லத்திகாவுடனான காட்சிகள் தொடங்கி ஒவ்வொரு காட்சியும் நம்மை இருக்கையோடு கட்டிப் போட்டுவிடுகின்றன..
மூன்று கோணங்களில் படத்தை மிக அழகாக கோர்வையாக்கித் தந்திருக்கும் இயக்குனரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
கோன் பனேகா கரோர்பதி (மில்லேனியர்) நிகழ்ச்சியில் துவங்கி, காவலர் விசாரணை வழியே பின்னோக்கி வரிசையாக பழைய நிகழ்வுகள் முதல் ஒவ்வொன்றாக அடுக்கி இறுதியில் நிகழ் காலம் கொண்டு வந்திருக்கும் பாணி அருமை.
கதா நாயகியாக நடித்திருக்கும் பெண் அசத்தியிருக்கிறார்.. நிறைய இடங்களில் அழகான பின்னணி இசை மனம் கவர்கிறது..
இறுதியில் ஜமால் - லத்திகா சந்திப்பும் அதன் பின் வரும் பாடலும்............... சொல்ல வார்த்தைகளே இல்லை..
என் அருகே அமர்ந்திருந்த சீனப் பெண் மிக ரசித்துப் படத்தைப் பார்த்ததை அவ்வப்போது வந்த சிரிப்பொலியிலிருந்து உணர முடிந்தது.. உலக மக்களில் பெரும்பான்மையோரை இப்படம் கவர்ந்திருக்கிறது..
இந்த இனிய விமர்சனத்தை நான் எழுதுகையில் ஓர் இனிய செய்தி என் செவிக்கு எட்டியது.. ஆம் ஸ்லம்டாக் மிலேனியர் படத்துக்கு 8 ஆஸ்கர் விருதுகள் கிட்டியிருக்கிறது. ஏ.ஆர்.ரகுமானுக்கு இரு விருதுகள் சிறந்த பின்னணி இசை மற்றும் பாடல் இசைக்காக கிட்டியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.
மொத்தத்தில் ஸ்லம்டாக் மிலேனியர் இந்தியாவின் மும்பை நகர அடித்தட்டு மக்களின் நிலையை வாழ்வியல் எதார்த்தத்தை அப்பட்டமாக காட்டியிருக்கும் ஓர் வரலாற்றுக் கல்வெட்டு.
-- பூமகள்.
0 comments:
Post a Comment