பேரலையோடு
பரள் பேசும்
புதுக்கவிதை
சங்கமச் சத்தம்...
பூ அவிழ
பூக்காம்பு கேட்டு
மயங்கும் மரகத
வனப்புச் சத்தம்..
இளவெயில் பட்டு
இலையூஞ்சல் ஆடும்
குயில் பாட்டு
குழையும் சத்தம்...
மூங்கில் காட்டில்
முட்டும் காற்று
முத்தம் தந்து
முனகும் சத்தம்..
மெல்விரல் படின்
இலை மூடும்
தொட்டாச்சிணுங்கி
நாணிச் சிணுங்கும்
வெட்கச் சத்தம்...
காதல் மொழி
பேசும் அழகு
பேடைக்கிளி இரண்டும்
கொஞ்சும் சத்தம்...
நள்ளிரவு நிலாநேரம்
நீரின் மேலே
தவளை தாவும்
தளுக் சத்தம்...
வண்டு வரும்
பூச்செண்டு அறியும்
ரம்மிய கமக
ரீங்காரச் சத்தம்...
கேட்கா சத்தம்
கேட்கும் நித்தம்
கேள்விக் குறியாய்
வாழ்க்கை மட்டும்..
வாழச் சொல்லி
வார்த்தை முட்டும்
சத்தமே சத்தமாய்..
சொல்லும் மனதின் சத்தம்...!!
-பூமகள்.
0 comments:
Post a Comment