Sunday, August 31, 2008
வருகை..!!
பிரிய மனமில்லை..
பின் வருகையில்..
இருக்க
மனமே இல்லை..
முன் வந்த பொழுது..
இரண்டு..
பின் வந்த பொழுது..
இருபது..
அந்நிய குடியுரிமை ரத்தத்தில்..
ஊறிப் போன
இந்தியக் குழந்தையின்..
இன்றைய நிலை..!!
உன் அழுகை..!
நான் உன்னை
முதன் முதலாக
பார்க்கையில்..
ஆதரவு கரங்கள் தேடி..
கைகள் அசைத்து..
கண்கள் இறுக்கி..
கண்ணீர் வழியாத
உன் அழுகை..
சோகத்துக்கு பதில்
மகிழ்ச்சியை வரவழைத்தது..
ஆம்..
அப்போது தான்
என் கைகள்
பூமியுடனான
உனது பந்தத்தை
எழுதி முடித்திருந்தது..
(மழலை மொட்டுகளை மலர வைக்கும் மருத்துவ பிரம்மாக்களுக்காக..!!)
Saturday, August 23, 2008
ந(ம்)ல் நட்பு..

பூவாகி மலர்ந்து மணம் வீசும் காலம்....
வாழ்வின் எல்லைக் கோடு வரை நீளும்..!!
அவற்றின் சுவாசப் பைகளில்..
சில்லரைச் சிதறல்களாக..
நம் சிரிப்பொலிகளைப் பதிவாக்கி
அவ்வப்போது குலுக்கிப் பார்க்கிறேன்..
சத்தமற்ற தனித்த பொழுதெல்லாம்..
நம் நட்பெனக்கு..
சத்தமெழுப்பி
இசைபாடி மகிழ்விக்கிறது..
பல மைல்கள் தொலைவிருந்தாலும்..
பேசி மாதங்கள் பல கடந்திருந்தாலும்..
சில காலம் நிரம்பிய உன்னை
பல நேரம் தினமும் நினைத்திருப்பேன்..
மனதினுள் வேண்டிக் கொண்டே
இருக்கிறேன்..
எனக்காக அல்ல
உனக்காக..
நம் உரையாடல்கள்..
நான் பேச...
நீ பதிலுரைப்பது..
மௌன மன படங்களாகவே
என் கண் முன் விரிகிறது..
உன் பதிலை
நானே யூகிக்கிறேன்..
என் பதிலை
நீயும் யூகித்திருப்பாய் என்ற
நம்பிக்கையில்..
புரிதலின் எல்லை
நாம் வரைந்த
கோடுகளையும் கடந்து நிற்கிறது..
உலகின் எங்கிருந்தாலும்
எனக்கான நட்பு..
மகிழ்வில் உன்னோடு
ஆரவரிக்கும்..
துயரில் உன்னோடு
தோள் கொடுக்கும்..
கலங்காதே என் நட்பே...!!
(என் தோழிக்கு சமர்ப்பணம்...!!)
Friday, August 8, 2008
செந்தமிழில் எண் கணிதம் - சொல்லாடல்கள்..!
அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்
அளவைகள்
@ நீட்டலளவு
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை
@ பொன்நிறுத்தல்
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்
@ பண்டங்கள் நிறுத்தல்
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்
@ முகத்தல் அளவு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
@ பெய்தல் அளவு
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி
--- பூமகள்.
மகிழம்பூ மனசில் பூக்கும் பூக்கள் எத்தனை..?!!
அந்த நறுமணத்தை உங்களில் வீச இதோ வருகிறது நூறு பூக்களின் அணி வகுப்பு..!!
ஒரு பூ காணலை… அதற்கு பதில் இந்தப் பூமகளை ஒன்றாக கருதிக் கொள்ளலாம் தானே??!!
- காந்தள்
- ஆம்பல்
- அனிச்சம்
- குவளை
- குறிஞ்சிப்பூ
- வெட்சி
- செங்கொடுவேரி
- தேமா
- செம்மணிப்பூ
- பெருமூங்கிற்பூ
- கூவிளம்
- எறுளம்பூ
- மராமரம் பூ
- கூவிரம்
- வடவனம்
- வாகை
- வெட்பாலைப்பூ
- செருவிளை
- கருவிளம்பூ
- பயனி
- வாணி
- குரவம்
- பச்சிளம்பூ
- மகிழம்பூ
- சாயாம்பூ
- அவிரம்பூ
- சிறுமூங்கிற்பூ
- சூரைப்பூ
- சிறுபூளை
- குன்றிப்பூ
- குருகலை
- மருதம்
- கோங்கம்
- மஞ்சாடிப்பூ
- திலகம்
- பாதிரி
- செருந்தி
- அதிரம்
- செண்பகம்
- கரந்தை
- காட்டுமல்லிகை
- மாம்பூ
- தில்லை
- பாலை
- முல்லை
- கில்லை
- பிடவம்
- செங்கருங்காலி
- வாழை
- வள்ளி
- நெய்தல்
- தாழை
- தளவம்
- தாமரை
- ஞாழல்
- மௌவல்
- கொகுடி
- சேடல்
- செம்மல்
- சிறுகும்குரலி
- வெண்கோடல்
- கைதை
- சிரபுன்னை
- கபஞ்சி
- கருங்குவளை
- பாங்கர்
- மரவம்
- தனக்கம்
- ஈஙகை
- இலவம்
- கொன்றை
- அரும்பு
- ஆத்தி
- அவரை
- பகன்றை
- பலாசம்
- அசோகம்
- வஞ்சி
- பித்திகம்
- கருதநாச்சி
- தும்பை
- துழாய்
- நந்தி
- நரவம்
- தோன்றி
- புன்னாகம்
- பாரம்
- பீர்க்கம்
- குருக்கத்தி
- சந்தனம்
- அகிற்பூ
- புன்னை
- நரந்தகம்
- நாகற்பூ
- நள்ளிருள்நாறி
- குறுந்தகம்
- வேங்கை
- எருக்கு
- ஆவாரம்பூ
மொத்தம் எத்தனை பூக்கள் உள்ளன எனத் தெரியவில்லை.. ஏதேனும் தவறு அல்லது விடுபட்டிருந்தால் சான்றோர்கள் இங்கு சொல்லித் திருத்தும் படி கேட்டுக் கொள்கிறேன்..!
அந்நியமான அத்தியாயம்..!
விடப்பட்ட கதை
ஒன்று மீண்டும்
படிக்க முனைகிறேன்..
முதல் பக்கத்தின்
மூலையில் உடைந்து
சிக்குகிறது மனம்..
கொக்கி போட்ட
வார்த்தையாடல்களில்..
மீதியும் அகப்பட்டுக்
கொ(ல்)ள்கிறது..
பக்கங்கள் கடந்து போக..
தாயின் கைவிட்டுப் போகும்
குழந்தை போல..
விலக மறுத்து
முந்தைய பக்கத்திலேயே
மண்டியிட்டு அழுகிறது..
ஓராண்டு கழித்து
அடுத்த அத்தியாயம்
எழுத முற்படுகையில்..
புரிகிறது..
விலகிப் போன
எழுத்துகளுக்கும்
எனக்குமான
அந்நியம்..!
பிரமிட் தொழில் என்றால் என்ன?
அப்படியெனில்.. உங்களுக்கு இந்தக் கட்டுரை பயனளிக்குமென நம்புகிறேன்... சமீபத்தில் ஒரு தினசரியின் இலவச இணைப்பில் படித்த ஒரு கட்டுரை என்னில் பல தெளிவுகளை ஏற்படுத்தியது.. அவ்வகைத் தெளிவை உங்களுக்கும் உண்டாக்க கடமைப்பட்டிருக்கிறேன்..
------------------------------------------------------------
பிரமிட் அல்லது சங்கிலித் தொடர் தொழில்கள்.. என்றால் என்ன??
ஒருவரிடமிருந்து(கம்பெனி நிர்வாகி) ஒரு பத்து பேர் 1 கூப்பன் வாங்கினால், 10 கூப்பன்கள் அவருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அவர், அந்த 10 கூப்பனையும் அவருக்கு தெரிந்த 10 பேரின் தலையில் கட்டி(விற்று).. கம்பெனிக்கு கட்ட வேண்டும். அதில் ஒரு பகுதி லாபமாக 10 கூப்பனை விற்றவருக்கு செல்லும். அந்த 10 நபர்களிடமும் பத்து பத்து கூப்பன்கள் மேலும் வழங்கப்பட்டு.. அவர்கள் ஒவ்வொருவரும் தலா 10 நபர்களை கண்டுபிடித்து கூப்பன்களை விற்றால் தான் லாபம் பார்க்க முடியும்.. அதாவது.. 1, 10, 100,.... இப்படியாக கூப்பன் வாங்குபவர்களின் எண்ணிக்கை பன்மடங்காகிவிட்டுப் போகும்..
ஆரம்பத்தில் இவ்வகைத் தொழிலில் நுழைந்தவர்களுக்கு அதிக லாபம் கிட்டவே செய்தது.. ஆனால்... கடைசியில்.. சங்கிலி அறுபட்டு.. இறுதியில் சேர்ந்தவர்களுக்கு கூப்பன்கள் மட்டுமே மிஞ்சும்... இது மிகப்பெரும் மோசடி என்று பெரும் போர்க்கொடிகளே பல நாடுகளில் தூக்கப்பட்டு விரட்டப்பட்டிருப்பதாகவும் அறியப்பெற்றேன்.. உதாரணம் அமெரிக்கா.
உண்மையில் இந்த சங்கிலித் தொடர் தொழில் ஏன் ஒரு கட்டத்துக்கு மேல் நிலை தடுமாறுகிறது??
எளிய உதாரணம் சொல்ல வேண்டுமானால்,
ஒரு வெள்ளைத் தாளோ.. அல்லது ஒரு செய்தித்தாளின் ஒரு தாளோ எடுத்துக் கொள்ளுங்கள். அதனை இரண்டாக மடியுங்கள். மூன்றாக.. இப்படி மடித்துக் கொண்டே போனால்.. 7 மடிப்புகளுக்கு மேல்.. உங்களால் மடிக்கவே முடியாது.. மிஞ்சினால் கடினப்பட்டு.. சுத்தியால் அடித்தால்.. 8 மடிப்புகள் மடிக்கலாம்..
அதாவது... ஒருவரிடமிருந்து வாங்கிய கூப்பன்.. மற்றொருவர் 5 நபர்களுக்கு விற்கிறார்.. மேலும் அந்த ஐந்து நபர்.. ஒவ்வொருவரும்.. 10 நபர்களைத் தேடி ஓடுகின்றனர்.. அடுத்தடுத்த மடிப்புகளில்.. 6ஆவது மடிப்பில்.. இந்தியாவில் உள்ள அத்தனை நபர்களுக்கும் விற்றாலும்.. ஏழாவது மடிப்பில்.. உலகத்தினர் அனைவருக்கும் கூப்பன் விற்றாக வேண்டிய நிலைக்கு எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கும்.. இறுதியில் கூப்பன் வாங்கியவருக்கு... மிச்சமாக.. கூப்பன்கள் மட்டுமே மிஞ்சும்.. ஆனால்.. மேலிருக்கும் தலைமை முதலாவதான முதலாளிக்கு கோடிகோடியாக பணம் கொட்டும்..
இவ்வகை பண மோசடியை அறியாமல்.. பலர் இதில் இறங்கி.. உழைக்காமல் எளிதில் பணம் சம்பாரிக்கும் நோக்கில் உலவி.. அநியாயமாக பணமிழந்து திரும்புவது வேதனை...
இதில் சக உபரித் தொழிலாக.. வெளிநாட்டு சவரக் கட்டிகளும்.. முகப்பூச்சுகளையும்.. பல்துலக்கும் தூரிகைகளையும் கொடுத்து விற்கப் பணிக்கின்றனர்.. அதுவும்.. ஒரு பல்துலக்கும் தூரிகையின் விலை..100 ரூபாய்... நமக்கு வேப்பங்குச்சியே மேல் என்று தலை தெறிக்க மக்கள் ஓட்டமெடுப்பதையும் பார்க்கிறேன்..
அவ்வகை மல்டி லெவல் மார்க்கெட்டிங்.. ஆதாரமே ஆட்டங்கண்ட நிலையில்... இதனைக் குறித்த தெளிவான பார்வையை அக்கட்டுரை ஏற்படுத்தியிருந்தது..
சமீபத்தில் சன் செய்தி அலைவரிசையிலும் இவ்வகையான மோசடிக்கு ஆளான பலர் குறித்த ஒரு செய்தியைப் பார்க்க நேர்ந்தது.. ஆகவே.. இவ்வகை தொழிலால் வரும் விளைவுகளை தெளிவாக்கவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதில் ஒரு மனநலமருத்துவர் அச்செய்தி குறித்து கருத்து தெரிவிக்கையில்..
"உழைக்க தயங்கும் சோம்பேறிகளும்.. எளிதில் பணக்காரர் ஆகவேண்டுமென்ற பேராசைக்காரர்களும் தான் இவ்வகை மோசடிகளுக்கு ஆளாகும் முக்கிய நபர்கள்" என்று குறிப்பிட்டார்..
ஆகவே.. மக்களே.. இனி யாரேனும் இவ்வகையான கூப்பன்கள் கொண்டு உங்களை நெருங்கினால்.. மெல்ல என்னை நினைவு கூர்ந்து அறிவாளியாகி விடுங்கள்..!!
Friday, July 11, 2008
தாரே சமீன் பர் - நிலத்தில் (பூக்கும்) நட்சத்திரங்கள்..! - விமர்சனம்
தாரே சமீன் பர்... (நிலத்தில் பூக்கும் நட்சத்திரங்கள்)..
தலைப்பே கவிதை போல... கவிதை மனதை கவிழ்க்கத் தவறவில்லை..
படத்தின் ஆரம்பக் காட்சியில் தலைப்பு போடுகையிலேயே வண்ண வண்ண மீன்களால் என்னை தன் வசம் இழுத்துப் பிடித்துக் கொண்டது படம்..


ஒரு மூன்றாம் வகுப்பு மாணவன்.. "இஷான் அகஸ்தி" தன் பாடப்புத்தக எழுத்துகள் நடனமாடுகின்றன என்று அப்பாவியாகச் சொல்கையில்... அவன் பொய்யாக நடிக்கிறான்.. படிக்க பயந்து பாசாங்கு செய்வதாக நினைக்கும் காட்சி தொடங்கி...
தண்டனையாக வகுப்புக்கு வெளியில் நிற்க வைக்க.. அவன் துறுதுறுன்னு நின்று கொண்டே சுவற்றில் ஆடியாடி செய்யும் சேட்டைகள் எல்லாம்.. அப்படியே... அவ்வயதுக்கு நம்மை கட்டிப் போடுகிறது... மேலும்..
குளத்திலிருந்து குட்டி குட்டி மீன் பிடித்து தன் வீட்டில் வைத்து அழகு பார்க்கும் காட்சி வரை.. முதல் சில காட்சிகளிலேயே... நெஞ்சுக்குள் இடம் பிடித்து விடுகிறார்..
சிறுவனுக்கு ஒரு சபாஷ்..
இப்போதெல்லாம் படத்தில் ஆரம்பக் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை ஹீரோவே தெரிய வேண்டுமென்று விரும்பும் கூட்டத்துக்கு மத்தியில்.. நம்ம அமீர்கான்.. நிகுமாக.. இடைவேளையின் போது வருவது மிகுந்த சந்தோசத்தினை ஆச்சர்யத்தோடு வரவழைக்கிறது...
படத்தில் இந்தக் காட்சி.. அந்தக் காட்சி என்று தனியே சொல்லவே முடியாத படி.. அத்தனைக் காட்சிகளும் அற்புதம்..
குறிப்பாக...
நம்மையும் அறியாமல் கண்கள் கசிந்த சில காட்சிகள்..
தன்னை போர்டிங் பள்ளிக்கு அனுப்புவதாக அப்பா கண்டிக்க...
அம்மா கைபிடித்து வரும் இஷான்.. அம்மா மட்டும் ரயிலேற.. ரயில் வேகமெடுக்க புறப்பட.. தான் கூட்டத்தில் மாட்டி அழுவது போல கனவில் கண்டு பயந்து.. விழித்து அம்மாவிடம் போர்டிங் பள்ளி வேணாம்.. நான் நல்லா படிக்க முயற்சிக்கிறேன் பாரும்மா... என்று... "A B C D E F M N O..." என்று சரமாறியாக கண்ணீரோடு கெஞ்சும் காட்சியில்.. அந்த தாயினை விட அதிக வலியை மனம் அடைகிறது..
அதே போல.. எல்லாரும் பள்ளியின் விடுதியில் விட்டுவிட்டு.. காரில் புறப்பட.. தனித்து நின்று.. அழுகையோடு பார்க்கும் இஷான்.. மனதை பிசைந்துவிடுகிறார்..
ஒரு எட்டு-ஒன்பது வயதுக் குழந்தையை.. எல்லாரும் சதா சர்வ காலமும் திட்ட.. சரிவர அம்மா முந்தானையின் பிடியே விடுபடாத நிலையில்.. அந்தக் குழந்தை தனித்து நின்று யோசிக்கும் காட்சிகள்.. அற்புதம்..
அமீர் கானின் வகுப்பறைக் காட்சியாக அவர் வரும் முதல் காட்சியிலேயே.. கலகலக்க வைப்பதோடு மட்டுமல்லாமல்.. ஒரு ஆசிரியர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றும் புரியவைக்கிறார்..
கோமாளி மாதிரி வேடமணிந்து முதல் முறையாக அவ்வகுப்புக்கு ஒரு இடைநிலை ஓவியாசிரியராக வரும் நிகும் என்கிற அமீர்கான்.. சில பாடங்களை நமக்கு சொல்லாமல் சொல்வது போல் இருந்தது..
எனக்கு அந்தக் காட்சியில் கிடைத்த படிப்பினைகள்..!
1. ஒரு குழந்தைக்கு.. அதுவும்.. ஆரம்ப நிலை வகுப்பில் இருக்கும் குழந்தைகளுக்கு எப்பவும் ஆசிரியர்கள் வில்லன்கள் போலத் தெரியவே கூடாது.. எப்போதும் அன்பு ததும்பும் முகத்தோடு ஒரு நட்புறவாடும் உணர்வோடும் தான் இருக்க வேண்டுமென்று சொல்ல வருகிறார்..
வகுப்பில் அனைவரையும் ஓவியன் வரைய சொல்லி அவரவர் கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டுவிட்டு.. மிகவும் மூடியாக அமைதியாக இருக்கும்.. இஷான் அகஸ்தியை சற்றுப் பொறுமையோடு கவனிக்க.. அவன் வண்ணங்களையோ தாளையோ தொடாமல் அப்படியே சிலையாக அமர்ந்ததைப் பார்த்து கொஞ்சம் பதறிப் போய்...
"கியா குவா பேட்டா?" - என்று கேட்டு பேச்சைத் துவங்கி.. எதுவுமே அவசரமில்லை.. மெதுவா வரைப்பா என்று சொல்லிவிட்டுப் போகும் அந்த கனிவு... இத்தனைக்கும் இஷான் எதற்குமே பதிலளிக்க மாட்டான்..
2. எப்படியான சூழலாக இருந்தாலும் ஒரு ஆசிரியருக்கு அன்பான கனிவுப் பேச்சுத்தான் முக்கியம் என்று சொல்லியிருக்கிறார்..
நிகுமாக வரும் அமீர் கான்.. பல இடங்களில் இப்படியான படிப்பினைகளை சொல்லாமல் சொல்கிறார்...
இஷானின் நோட்டுப்புத்தகத்தை .. இஷான் ஆபத்தில் அஇருக்கிறானென நிகும் வருந்தும் காட்சிகளில்.. நிஜமாகவே மனம் பதைத்து கண்கள் பனிக்கின்றன.. அழுகை முட்டிக் கொண்டு வருவதை எந்த கல் மனம் படைத்தவரும் தடுக்கவே முடியாது..
நிகுமான அமீர்கான் இஷானின் பெற்றோரைச் சந்தித்து.. நோய் பற்றி விளக்கி.. விரிவாக பேசுகையில்.. அழுகை முட்டிக் கொண்டு வர.. நா தழுதழுக்க... கொஞ்சம் தண்ணி கிடைக்குமா? என்று கேட்டு அழுகையை அடக்குகையில்...
இங்கும் அருவி மாதிரி அழுகை வந்துவிடுகிறது... ஒரு நிஜமான பாரம் மனத்தில் விதைந்துவிடுகிறது..
தந்தையினை ஒரு சீன மொழி அட்டையைக் காட்டி படிக்க வைத்து.. அவருக்கு இஷானின் நிலைமையைப் புரியவைக்கும் காட்சியும்..
பின்னால் ஒரு நாள் இஷானின் தந்தை, இஷானின் பள்ளிக்கு இஷானைப் பார்க்காமல் சென்று.. நிகுமிடம் தனது மனைவி அந்நோயைப் பற்றி இணையத்தில் படித்தாரென மிகுந்த பொறுப்புள்ளவர் போல மிடுக்காக விளக்குகையில்..
நிகும், ஏன் இதை என்னிடம் சொல்கிறீர்களெனக் கேட்க..
இஷானின் தந்தை, "இல்லை.. பசங்க மேல் எங்களுக்கும் அக்கறை இருக்குன்னு காட்டத்தான்.."என்று சொல்ல வர..
எது அக்கறை.. என்று கேட்டு... "மகனே.. நான் உன் மேல் அதிகமாக பாசம் வைச்சிருக்கேன்.. உனக்கு என்ன பிரச்சனையென்றாலும் நானிருக்கிறேன்.. என்னிடம் ஓடிவாப்பா" இப்படி அன்பாக கைபற்றி தலைகோதி பேசுவது தானே அக்கறை... அப்படின்னு சொல்லும் காட்சிகள் சம்மட்டியடி..
சாலமன் தீவின் பெயரைச் சொல்லி.. அதைப் பற்றி உங்க மனைவி இணையத்தில் படித்திருக்கிறாரா என நிகும் கேட்க..
இல்லையே ஏனென இஷானின் தந்தை வினவ..
அங்கே.. வாழும் ஆதிவாதிகள்.. ஒரு மரத்தை வெட்ட வேண்டுமெனில் கோடாளியால் வெட்ட மாட்டார்கள்.. அவர்கள் வழக்கப்படி.. அந்த மரத்தைச் சுற்றி நின்று.. அதனைத் தூற்றியும்.. பெரும் கோசங்கள் சத்தங்கள் எழுப்பியும்.. மோளங்கள் கொட்டியும்.. நிந்தித்துக் கொண்டே இருப்பார்கள்..
காலப்போக்கில் அந்த மரம் தன் வலுவிழந்து.. அதுவே செத்து விழுந்துவிடும்.. - என்று சொல்லி முடிக்கும் நிகுமை.. வருத்தத்தோடும் அதிர்ச்சியோடும் பார்த்து விடைபெறுகிறார் இஷானின் தந்தை..
வெளியே வரும் தந்தை.. இஷான் அழகாக படிக்க முயன்று கொண்டிருப்பதைப் பார்த்து கண்ணீர் மல்க இஷானைச் சந்திக்காமலேயே விடைபெறுகையில்.. நமக்கும் அழுகை வந்தே விடுகிறது..
வகுப்பில் இஷானுக்கு நம்பிக்கை வரவழைக்க.. அவன் போலவே கடினப்பட்ட பல அறிவியலாளர்கள் பற்றி சொல்லிக் கொண்டே வந்து.. இறுதியில் இஷானையும் நன்றாக பதில் சொல்ல வைக்கிறார்..
அதுமட்டுமின்றி.. இஷானிடம் அவர் ரகசியமாக தன் பற்றி கூறி.. ஒரு நல்ல நட்புறவை ஏற்படுத்திக்கொள்கிறார்.. அந்த இடமும் கிளாஸ்..
இறுதிக் காட்சியில்...
படம் வரையும் போட்டியில்.. அத்தனை கூட்டத்தில் இஷான் வரைந்த ஓவியத்தைக் கொடுத்துவிட்டு.. நிகுமின் வரைபடம் என்னவென பார்க்க ஆவலோடு வரும் இஷானின் செயல்.. நம்மையும் குறுகுறுக்க வைத்து காண வைக்கிறது..

இறுதியாக வயிற்றை கட்டிக் கொண்டு அமீர் கானுடன் இஷான் அழும் காட்சி.. மனம் நெகிழ்ந்து அழ வைக்கிறது.. ஆனால் இது ஆனந்தக் கண்ணீர்..

இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.. ஒவ்வொரு காட்சியிலும் இப்படி ஆயிரம் அர்த்தங்கள்..
இந்தப் படம்.. உண்மையிலேயே பல நல்ல விசயங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறது..
இப்படம் பார்த்தவுடன் என்னுள் ஏற்பட்ட இரு மாற்றம்..!!
1. சின்ன வயது முதலே குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டுமென்ற என் ஆவல்.. இன்னும் வலுப்பெற்றது..
2. ஓவியத்தில் ஈடுபாடு அதிகமுள்ள நான்.. மீண்டும் ஓவியம் வரை ஆரம்பிக்க வேண்டுமென்பதும்..
கண்டிப்பாக இப்படம் ஆஸ்காருக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.. நிச்சயம் ஆஸ்கார் விருது கொடுத்தே ஆகவேண்டும்..
இன்னும் இது போன்ற பல படங்களை அமீர் கான் எடுக்க வேண்டும்..
எல்லாம் சரி தான்.. ஆனால் ஒரே ஒரு பெரிய ஏக்கம்..
எப்போ நம்ம தமிழ் மொழியில் இவ்வகைப் படங்கள் வரும்??!!!!!!!
--- பூமகள்.
Thursday, July 10, 2008
மலர்ந்தவையும் மலராதவையும்..!

எங்களில் வாசமில்லை...!
மலராத
எங்களில் நேசமில்லை...!
மலர்ந்ததால்
உலர்ந்தது..
எங்களின்
வாழ்க்கை..!
மலராததால்
புலரவேயில்லை
எங்களின்
வாழ்க்கை..!
காய்க்காத பூவானது
எம் குற்றமா??
மலராத மலரானது
எம் குற்றமா??
பூ காய்ந்தாலும்..
காயாது
எங்கள் மேலான பழி..!
மொட்டவிழ்ந்தாலும்
அழியாது
எங்கள் மேலான சுழி..!
உருவாக்காததால்
நாங்கள்
இல்லத்தில் இருந்தும்
இல்லாமலானோம்..!
உருவாகாததாலே
நாங்கள்
இல்லத்தில் இருக்காத
இல்லாதவர்களானோம்..!
அறிவியல் விடியலில்
மூச்சுப் பிடித்து
காத்திருப்போம்..!!
மலர்தலும்
காய்த்தலும்
புலரும் நம்
வாழ்வில் வா...!!
--- பூமகள்.
Tuesday, July 8, 2008
நட்புக்காக..!

புன்னகை
தேடும்
பொன் தேர் நீ..!
மகிழ் மனம்
தேடும்
மலைத் தேன் நீ..!
பூக்கள்
தேடும்
தேனீ நீ..!
நெருஞ்சியாய்
குத்தாத
குறிஞ்சி நீ..!
ஊடல்
நட்பிற்கும்
பொதுவென
உணர்த்தியது நீ..!
வார்த்தைகளின்
நிசப்தத்தில்..
நட்பை நிரப்ப
கற்பித்தது நீ..!
ஆர்ப்பரிக்கும்
அலையாயினும்
அவையடங்கும்
ஆழ்கடல் நீ..!
அகங்கண்டு
பேசும்
அழகுவிந்தை நீ..!
பகர்ந்தது
புரிந்ததும்..
பகராதது
தெரிந்தும்..
எழுதும்
நட்பிலக்கியம் நீ..!
இன்னும் சொன்னால்
அடிப்பதும் நீ..!!
என்னென்று வாழ்த்த..
என்றென்றும்
பல்லாண்டு
புன்னகையில்
வாழி நீ..!!
-பூமகள்.
Sunday, July 6, 2008
விளைவு..!
விளைவு..!
நெரிசல் இடுக்கில்
நழுவியபடி..
வாழ்க்கை..!
நகர்ந்தேன்..
விரட்டியது..!
குமைந்தேன்..
பேருவமாகி
பயங்காட்டியது..!
எழுந்தேன்..
வியந்தது..
விழித்தேன்..
விலகியது..!
அறிந்தேன்..!
அலறியது..!
அறிவித்தேன்..!
தெறிக்க ஓடியது..
நிமிர்ந்தேன்..!
வானம்
வசமாகியது..!
வாழ்வு
சுகமாகியது..!
குறிப்பு: தலைகீழாகவும் படிக்கலாம்..
--- பூமகள்.
Monday, June 30, 2008
உலக அன்னையருக்காக பூவின் சின்ன சந்தப் பூச்செண்டு..!
இந்த படத்தின் மிக முக்கிய பாடல்களில் மகத்தான பாடலாக நான் கருதும் பாடலான "மேரே மா....!!" - பாடலை சந்தங்களுக்குத் தக்க படி அப்படியே அர்த்தம் மாறாமல் மொழியாக்கம் செய்ய முயற்சித்திருக்கிறேன்..
ஒரு சில வார்த்தைகள் சரியாக அர்த்தமறியாவிடினும்.. (மன்னியுங்கள் ஹிந்தி ஆர்வலர்களே..
உலகத்தின் அனைத்து அம்மாவும் இந்த மழலையின் சின்ன அன்பு காணிக்கை..!
பாடல் வரிகள்:
(பல்லவி)
நான் எப்பவும் சொல்லியதில்லை - ஆனாலும்
இருளைக் கண்டு பயந்துடுவேனம்மா..
நான் எதையுமே காட்டுவதில்லையே..
உன் அருகாமை விரும்புவேனம்மா...
உனக்கு எல்லாம் தெரியும்
தானேம்மா..??
உனக்கு எல்லாம்............
தெரியுமே என் அம்மா...!!
(சரணம் - 1)
கூட்டத்தில் என்னைத் தனியே விட்டாலுமே
வீட்டை தேடி வரவே முடியாதேயம்மா..
எத்தனை தூரமென்னை விட்டாலுமே.
நீ என்னை மறக்க மாட்டாய் இல்லம்மா..??!!
நான் இத்தனை மோசமா சொல்லம்மா...
நான் இத்தனை மோசமா சொல் என் அம்மா...!!
(சரணம் - 2)
எப்போதெல்லாம் அப்பா என்னை
மேல்தூக்கியே விளையாடும் போதெல்லாம்மா...
என்னருகிலே நீயிருப்பாயே.. நான்
வந்து உனை அணைச்சி கொள்வேனேம்மா..
அப்பாக்கிட்ட சொல்லியதில்லையே... - ஆனா
நான் உடைஞ்சு போயிடுவேனேயம்மா..
முகத்தில் நான் காட்டியதில்லையே...
மனசில் பயந்து நடுங்கிடுவேனே அம்மா...
உனக்கு எல்லாம் தெரியும்
தானேம்மா..??
உனக்கு எல்லாம்............
தெரியுமே என் அம்மா...!!
நான் எப்பவும் சொல்லியதில்லை - ஆனாலும்
இருளைக் கண்டு பயந்துடுவேனம்மா..
நான் எதையுமே காட்டுவதில்லையே..
உன் அருகாமை விரும்புவேனம்மா...
உனக்கு எல்லாம் தெரியும்
தானேம்மா..??
உனக்கு எல்லாம்............
தெரியுமே என் அம்மா...!!
எழுத்தாக்கம்: பூமகள்
Thursday, June 5, 2008
இன்று மட்டும் என்ன??
பூக்கள் இன்று
அதிகமாகவே
அழகாயிருந்தன..
ஒரு வேளை
என் வருகையை
முன்பே அறிந்து
மனமடல் திறந்து
சிரித்தனவோ?
காற்றில் என்ன
சுகந்தம்..??
ஓ...!!
நான் தடவ மறக்கும்
வாசனையை பரவ
விட பார்த்திருக்கும்
மகரந்த குழல்களின்
மாட்சிமையா??
வானத்தில் மேகம்..
புத்தோவியம் வரைந்து
ஏதோ ரகசியம் என்னோடு
மட்டும் பேசும் சங்கேத
மொழி எதற்கு...??
ஓ....!!
என் ராஜகுமாரரை
வரைந்து எனை
வெட்கப் பட வைத்து
கீழ் வானத்தை இன்னும்
சிவப்பாக்க திட்டமோ??
சாலைகள் என்ன..
முன்னை விட
பளபளப்பாய்...??
என்னை
அதனில் பதிக்க
(பாத)ரசமேதும்
பூசிக் கொண்டதோ??
இன்று மட்டுமென்ன..
எல்லாமே புதுமையாய்..!!!
ஓ....!!
நான் எழுதிக் கசக்கிய
காகித கிறுக்கல்களை
காற்று காட்டிக்
கொடுத்து
விட்டனவோ..?
இல்லையில்லை..
இருக்காது..
இது...
வசந்தம் நோக்கி
காத்திருக்கும்..
இயற்கையின்
வரவேற்புக் கம்பளம்..
நானும் காத்திருக்கிறேன்..
குயில்களின் கூவலோடே..
வசந்தம் வரும் வழியில்...!!
-பூமகள்.
Monday, June 2, 2008
வளைவுக் கோலம்..!!
நெளிவு சுழிவில்..
நெளிந்த படி இருந்தது..
என் வீட்டுக் கோலம்...
புரியாமல் போகும்
என்னை புன்சிரிப்போடு
வழி அனுப்பியது...
நெளிந்து கொடுத்தால்
நிமிரலாமென பக்கவாதங்கள்
வேதம் ஓத...
சத்தியத்தின்
சோதனைக் கூடத்தில்
நெளியாததால்..
வெளியிலிட்ட கரித்துண்டாய்
நான் மட்டும்..
Sunday, June 1, 2008
துவக்க முடிவு..!
தூரத் தெரியும்
ஒற்றை மரம் நோக்கி
வடக்கிருக்கிறது..
உடைந்த திசையிலி
கைகாட்டி..!
--- பூமகள்.
Monday, May 26, 2008
எவை இனிமை?
பரண் ஏறி
ஏதோ தேடும்..
பொழுதுகள்..
ஏதோ தேட
எத்தனிக்க..
எதேதோ அகப்பட்டு
நிதர்சன நிமிடங்களைத்
திருடிச் செல்லும்..
ஏடு தூக்கும் காலத்தில்
மழலைக் கையெழுத்தில்..
முதன்முதலில்
கிறுக்கிய ஐந்துமாத
கவிக்குழந்தை..
ஆரம்ப பள்ளி
புத்தகங்களின் இடையில்..
ஏதோ ஒரு வகுப்புத்தோழி
ரகசிய கிசுகிசுப்பில்..
குட்டி போடுமென
பத்திரப்படுத்தி வைக்கச் சொன்ன
மயிலிறகு பீலிகள்..
தினக்குறிப்பேட்டில்..
மனம் குறித்து வைத்த
ரகசிய குறியீடுகளோடான
பனிரெண்டாம் வகுப்பு..
ஆட்டோகிராப்புகள்..
இத்தனையும் கண்ணுற்று..
நிஜத்துக்கு வருகையில்..
மறந்தே போயிருக்கும்..
எதை தேட பரண் ஏறினேன்..??
--- பூமகள்.
Thursday, May 15, 2008
பூவப்பாயணம்..!!
நடுநிசி நேரத்தில்..
இரவுப்பணி முடிந்து
கிரீம் ரொட்டி வாங்கி
ஊட்டி விட்ட நான்கு
வயது நாட்கள்..
சைக்கிள் முன்புறம்
கூடையில் பூவேற்றி..
ஊர் சுற்றி
காட்டித் திரிந்த
மூன்று வயது நாட்கள்..
காத்திருந்து எனை
அழைத்துச் செல்லும்..
என்அலுவலக
வேலை நாட்கள்..
பிறந்த நாள் முதல்
இன்று வரை..
சுமப்பது ஒன்றையே
சுகமாகக் கொண்ட
தங்கத் தந்தையே...
எப்போது எப்படி
என் கடன்
கழிக்க போகிறேன்??
குழந்தையான வயதிலேயே
குடும்ப குழுமத்தில்
பொருள் இருப்பும்..
உலக நடப்பும்
புரிவித்த வித்தகரே..
பொருளில்லா துயர்
நேரங்களில்...
புன்னகைப் பூக்க
படிப்பித்தவரே...
பகிராத விசயமென்று
எதுவுமில்லை உன்னில்..நான்
பகிராத ஒன்றிருந்தாலும்
மௌனத்தில் பரிமாறியவையே
அவை..!!
நேர்மையின் இருப்பிடமே..
மனத் திடம் இருந்தால்..
சூழ்நிலை எதுவும் நம்மை
மாற்றாதென வாழ்நாள்
சாட்சியானவரே...
இன்னும் சொல்ல
ஆயிரமுண்டு...
எத்தனை பிறவியெடுத்தாலும்
என் இக்கவியும்
உன் புகழும் சொல்லி
முடிக்க முடியாமலே...
தொடரும்..
நம் பந்தம் போலவே..!!
__________________
--- பூமகள்.
Friday, May 9, 2008
காலன் தீண்டிய கயலரசி
காலன் தீண்டிய கயலரசி..
மனம் மயக்கிய இளந்தளிரே..!
முனைப்பின்றி போனதேனோ - உந்தன்
மலர்விழி மூடி உறங்கத்தானோ??!
எடுத்து வைத்த சிற்பமே.. நீ
செய்யும் வேலை சித்திரமே..!
எழுச்சியின்றி போனதேனோ - எங்களை
அழ வைத்துப் போகத்தானோ??
அமைதியின் இருப்பிடம்.. நீ
பாசத்தின் பதிப்பிடம்..!
உன் பாசம் படிந்த நாட்களெண்ணி
உடைந்து அழுது போகத்தானோ??
கலைமகளின் கடைக் கண்
கிட்டாதென்று மரணமேன்??!
கலையரசி நீ நினைத்தால்
எட்டாததும் உண்டோ??!!
ஓராயிரம் கதை பேசி
ஒன்றாய் விளையாடிய
ஓயாத நினைவலைகள்
ஓடி வந்து தளும்புதே..!!
சிந்திய சிரிப்பொலியும்..
சீரிய உன் பண்பும்..
சிந்தை விட்டகலவில்லை..
சிந்திய கண்ணீரும் அடங்கவில்லை..!
அத்தை மகள் அட்சயமே..
அன்பு வீற்றிருக்கும் நாட்டியமே..!
கண்ணீரோடு ஏன் துமைந்தாய்..? - உன்
முடிவெழுதி ஏன் போனாய்??
கோலம் போடும் கோதரசி..
கண்கள் பாடும் கவியமுதே..
கோதை மன பலமெங்கே??
கோமதி உன் மதி எங்கே??!!
ஆறடி கூந்தலழகி.. உன்
ஆறறிவு.. போனதெங்கே??!!
அரைநிமிட அழுத்தத்தில்
அழிவெழுதி போனதேனோ??!!
அமைதியாய் கண்ணுறங்கு தளிர்பூவே - உன்
ஆன்மா துயரின்றி துயிலுறங்க
ஆண்டவனைப் பிராத்தித்து இந்நிலை
அடுத்திங்கு வராத வரம் கேட்பேன்..!
--- பூமகள்.
Saturday, May 3, 2008
அஞ்சாங்கிளாஸ்..!!
பட்டாம் பூச்சி தேடி
ஒரு பொழுது முழுக்க
அலைந்ததும் உண்டு..
சின்ன சின்ன
வெட்டுக் கிளி
பிடித்து
சிறைவைத்ததும் உண்டு..
அஞ்சாங்கிளாசினுள்
பாட்டிலில் வளர்த்தக்
கூட்டுப் புழு
பட்டாம் பூச்சியாகும் வரை
தினம்தினம் வகுப்புக்கு
பச்சிலை உணவுடன்
ஓடி வந்த
பள்ளி நாட்களும் உண்டு..
அறிவியல் ஆசிரியை
தாவரவியலினை
விளக்க..
வகுப்பறையில்
தேங்காய்த் தொட்டியில்
பச்சைப் பயிறிட்டு
முளைவிட்ட முதல்நாள்
சிலிர்த்துப் பார்த்த
பெருமிதமும் உண்டு..!!
தோற்றம் மாறிய (பள்ளி)முகப்பு
தாண்டிப் பயணப்படும்
நொடியெல்லாம்..
ஏற்றி வைத்த தீபமாக
ஒளிவீசிடும்
பள்ளி நாட்கள்..!!
______________
பூமகள்.
Wednesday, April 16, 2008
போராட்டம்..!!
விழிகளிரண்டும்..!!
கண்ணாமூச்சி ஆடி..
களைத்துவிட்ட கடைவிழியில்
முத்தாக படிந்தது பதநீராக
பாவை நீர்...!!
போராடி விழுந்த
விழுப்புண்ணுமில்லை..!
போராட்டம் நிகழ்ந்த
தடையமுமில்லை..!
களைப்படைந்த கண்கள்
புரியாமல் முழிக்கும்..!!
கணினி பொறியாளியா??
இல்லை - நான்
களத்தின் போராளியா??!!
~பூமகள்.
Tuesday, April 15, 2008
மக்கள் தொலைக்காட்சியின் சித்திரை உலா விமர்சனம்
ஆமாம்.. "சித்திரை உலா" என்ற நிகழ்ச்சி தான் அது.
அதில் சென்னை அம்பத்தூரில் இருக்கும் “தாய்த் தமிழ் பள்ளி”யைச் சேர்ந்த 21 குழந்தைகளை வெளியில் சுற்றுலாவாக அழைத்துச் சென்று.. அவர்களோடு சந்தோசமாக விளையாடி அவர்களுக்கு புதியவற்றைக் கற்றுத் தரும் நிகழ்ச்சி.
இதில் வரும் தொகுப்பாளினி ஏற்கனவே வேறொரு நிகழ்ச்சியில், ஏழைக் குழந்தைகள் இருவரை அழைத்துச் சென்று அவர்களுக்கு பிடித்தமான உடையோ, விளையாட்டுப் பொருளோ எதுவாகினும் வாங்கித் தந்து திரும்ப கொண்டு வந்து விடுவார். அந்த நிகழ்ச்சியின் பெயர் தெரியவில்லை. இந்த நிகழ்ச்சி எங்கள் வீட்டில் பிரபலம். அதே தொகுப்பாளினி தான் இந்த நிகழ்ச்சியையும் வழங்கினார்.
நான் நிகழ்ச்சியின் பாதியிலிருந்து கவனித்ததால் ஆரம்பம் முதல் என்னென்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், நான் பார்க்கையில் இரு வேன்களில் குழந்தைகள் மாமல்லபுரம் நோக்கிப் பயணப்பட்டிருந்தனர்.
நிகழ்ச்சி தொகுப்பாளினி, அன்புடன் எல்லா குழந்தைகளிடம் உரையாடி, எழுதுகோலையும் கையேட்டையும் கொடுத்து, இது வரை பார்த்து வரும் அனைத்தையும் அழகிய தமிழில் எழுதும் படி சொன்னார். அதிகம் யார் எழுதுகிறார்கள் என்று இறுதியில் பார்ப்போம் என்று சொல்லி குழந்தைகளின் ஒரு ஆரோக்கியமான போட்டியை உருவாக்கினார்.
அந்த குழந்தைகளிடம் எந்த பாரபட்சமும் இன்றி அன்புடன் எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டி, தனி ஒரு பெண்ணாக அழகான வழி நடத்திச் சென்றார். ஒரு உணவகத்தில் உணவு உண்ணச் செய்து, இறுதியில் பரிமாறிய ஐஸ்கிரீமுக்கு தூய தமிழ் சொல் என்ன என்று வினவி, குழந்தைகளை உண்ணும் போதும் ஆழ்ந்து சிந்திக்க வைத்தார். கூடவே நம்மையும் சிந்திக்க வைத்தார்.. இறுதியில் அவரே சொன்னார்… ஐஸ்கிரீமுக்கு தூய தமிழ் சொல் “பனிக்கூழ்” என்பது தான்.
ஒவ்வொரு முறை மக்கள் தொலைக்காட்சி பார்க்கையிலும் ஒரு புதிய சொல்லையோ அல்லது நிகழ்ச்சியின் தரமோ மனதில் பதிந்து நெகிழச் செய்துவிடுகிறது..!!
அத்தகைய வகையில் அமைந்த இந்நிகழ்ச்சி என் மனத்தில் பெரும் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தத் தவறவில்லை..!!
ஒரு பெண் தொகுப்பாளினி இத்தனை அழகாக 21 குழந்தைகளை வழி நடத்தி, ஆசிரியைகளையும் விட அன்புடனும் பொறுப்புடனும் அமுதத் தமிழில் அழகாக கற்றுத் தந்த செயல் என்னை பெருமிதம் கொள்ளச் செய்துவிட்டது. ஆகவே, இந்த விமர்சனம் எழுதி, எனது மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.
நிழல் உருவங்களையே எல்லா தொலைக்காட்சிகளும் முதன்மையாக போற்ற.. நிஜத்தை அதுவும் அடுத்த தலைமுறையினரின் சிறப்பான முன்னேற்றத்தையே முதன்மையாக கொண்டு செயல்படும் மக்கள் தொலைக்காட்சி தன்னிகரற்ற தொலைக்காட்சி என்பதில் சிறிதும் ஐயமில்லை…!!
Thursday, April 3, 2008
விடியல் தேடி..!
அதிகாலை பனியில்
இருள் தலைதுவட்டி
இமை திறக்காமல்
காத்திருந்தது.!!
மெல்ல கண் மலர்கிறேன்.!
முகத்தோடு புன்னகை
ஒட்டும் ரோஜாவனத்துக்கு
தண்ணீர் ஊற்றுகிறேன்..!!
வாசலின் முகம் கழுவி
தென்னங்கீற்றால் தலைவாரி
பச்சை வண்ணமிட்டு
வெண் பொட்டிடுகிறேன்..!!
புள்ளிகள் தானே
கோடிட்டு கோலமாகின்றன
கற்பனை முகடில்!!
எண்ணத் திரையை
மண் தரையில்
பிரதி பதிக்கிறேன்..!!
புரிந்து போடப்படும்
இக்கோலமும் பல
ராஜகுமாரர்களுக்கு
புரியா கடவுளின் கோலம்
போலவே இன்னமும்..!!
~பூமகள்.
Friday, March 28, 2008
கரைந்தும் கரையாதவை..!!
கவித்துவ காலம்..!!
கவியத் துவங்கியது
கண்களில் சோகம்..!!
இருளத் துவங்கியது
இமைகளின் ஓரம்..!!
குவியத் துவங்கியது
தவிப்பின் காரம்..!!
இயங்கத் துவங்கியது
இரயிலடி சத்தம்..!!
துளிக்கத் துவங்கியது
விழியீர மிச்சம்..!!
கையசைக்கச் துவங்கியது
இதயத்தின் வேரும்...!!
மெய்யசைய மறுத்தது
என்மன தேரும்..!!
-பூமகள்.
பார்வைப் பயணம்..!!

புரியவில்லை விழிகளுக்கு..!!
திரும்ப திரும்ப
பார்த்து பார்த்து
தேடிக் கொண்டிருந்தன
அகன்ற விழிகள்
அர்த்தங்களின்
அர்த்தங்களையே..!!
உயிர் துளைக்குமளவு
தேடித் தீர்த்தது விழிகள்..!!
தள்ளி நின்ற பார்வைகள்..
தள்ளிச் செல்ல மனமின்றி
முட்டிக் கொண்ட
நேரங்களில்..
விட்டுச் சென்றன..
காற்றிடைவெளிகளை..!!
மின்னல் வெட்டின
தருணங்களில்
காந்தத்தின்
எதிர்துருவமாயின..
பார்வைகள்..!!
ஊமைக் கண்கள்
தளும்பி நின்றன...
தவிப்புடனே
மோனநிலையில்..!!
தலை தூக்காத
தலைப்புடன் நீ..!!
தலை திருப்பாத
தவத்தில் நான்..!!
-பூமகள்.
Wednesday, March 19, 2008
விழிப்பு கடந்து...!!
ஏகாந்தத்தில் எழுந்து
வெளிச்சம் பார்க்கிறேன்..!!
குயில்களின் சிறகடிப்பும்
குருவிகளின் கூவலும்
கன்னம் முழுக்க மஞ்சள்
தடவி சிவந்து சிரிக்கும்
கிழக்கின் கீழ் வானமும்...
கடிகார கூப்பாடில்
கனவு கலைந்து
சலித்துக் கொள்கிறேன்...
நூறாவது மாடியில்
மூச்சு முட்டும் வன்கட்டிட
முகப்புகளை கவலையோடு
பார்த்த வண்ணமே..!!
(இறுதி வார்த்தையில் துவங்கி சில நொடிகளில் எழுதிய கவிச்சமர் கவிதை..!)
~பூமகள்.
Monday, March 10, 2008
பனித்துளி..!!
நிறமிழந்த பனித்துளி
வாங்கினேன் மேகத்திடம்..!!
மழைக் கம்பி பிடித்து
மரங்களில் பாசியாகி
பச்சை வண்ணம் தொட்டு
நிறம் மாறி மகிழ்கிறது..!
செம்மண் பூமின்
சிவந்த மேனியில்
சிலிர்த்து இறங்கி
சிவப்பாடை
உடுத்திக் கொள்கிறது..!
கருசக்காட்டிலும்
களிமண் பூமியிலும்
சாம்பல் நிறம் பூசி
கருமையால் பொட்டிட்டு
புன்னகை பூக்கிறது..!!
எப்படி எப்படியோ
நிறம் மாறினாலும்
அதிகாலைப் பனியில்
நடுங்கிய புல்வெளியில்
நிறமின்றி ஜொலித்து
எதையோ என்னுள்
புரியவைக்கிறது..!!
~பூமகள்.
Saturday, March 8, 2008
அம்மா..!
ஒவ்வொரு சொல்லும்
என்னை உயிர் தொட்டு
உரசிச் செல்கிறது..!
உறவுகளின் உள்முகத்தில்
இன்பம் செதுக்கி
உன் இனிமை காணுகையில்
எனை மறந்து களித்திருக்கிறேன்..!
எங்கோ தொடங்கும்
உரையாடல் உன்
மென்னுளம் காட்டி
விடைபெற்றுச் செல்லும்..!!
பருப்பு ரசப் பக்குவமும்
பாங்காக பேசும் உன்
வெகுளித்தனமும்
வெள்ளந்தி மனமும்
என்னோடு சீராக
அனுப்பி வைப்பாயா
அம்மா..!!
(கவிச்சமரில் நொடிப்பொழுதில் தோன்றிய கவிதை)